414. வைணவ திவ்யதேசம் 8 - திருக்கபிஸ்தலம்
இவ்வைணவ திவ்யதேசம் பாபனாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில், கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது. வாலியும் சுக்ரீவனும் இங்கு பெருமாளை வழிபட்டதால், இப்புண்ணியத் தலம் கபிஸ்தலம் (கபி = வானரம்) என்ற பெயர் பெற்றது. இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. கபிஸ்தலத்தோடு, திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவையும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கிழக்கு நோக்கி கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் மூலவ மூர்த்திக்கு ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற திருநாமம். உத்சவரின் திருநாமம் கஜேந்திர வரதன். தாயார் ரமாமணிவல்லி மற்றும் பொற்றாமரையாள் என்று அழைக்கப்படுகிறார். தீர்த்தமும் விமானமும் முறையே கஜேந்திர புஷ்கரிணி, ககநாக்ருதி விமானம் என்றும் அறியப்படுகின்றன. கபிலத் தீர்த்தம் என்ற புண்ணிய நீர்நிலையும் இங்கு உள்ளது. ஆஞ்சநேயரும் பெருமாளை இங்கு வழிபட்டார் என்பதற்கு ஒரு பழங்கதை உண்டு.
தலபுராணம்:
ஒரு சமயம், மகாவிஷ்ணுவின் பரம பக்தனான இந்திரத்யும்னன், துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு, கஜேந்திரன் என்ற யானை உருவில் பெருமாளுக்கு மலர்ச்சேவை செய்து வந்தான். அவனைப் போலவே, குஹ¤ என்ற கந்தர்வன் அகத்திய முனியின் கோபத்துக்கு ஆளாகி, ஒரு முதலையாக உருமாறி கபிஸ்தலத்தில் உள்ள தடாகத்தில் வசித்து வந்தான்.
ஒரு முறை, கஜேந்திரன் தடாகத்தில் தாமரை மலர்களை பறித்துக் கொண்டிருந்தபோது, அவன் காலை அந்த முதலைப் பற்றியது. எவ்வளவு முயன்றும் விடுபடமுடியாமல், கஜேந்திரன் பெருமாளைத் துதித்து பெருங்குரலெடுத்து தன்னைக் காப்பாற்றுமாறு அழைக்க, கருடவாஹன ரூபராய் தோன்றிய பரந்தாமன் திருச்சக்ரத்தை வீசி முதலையை அழித்ததார். கஜேந்திரனின் சேவையையும், பக்தியையும் மெச்சி அவனுக்கு பெருமாள் மோட்சம் அருளினார். அதனாலேயே, இங்கு கிடந்தருளியுள்ள எம்பெருமான் 'பாப விமோசன' குணம் உடையவராக கருதப்படுகிறார்.
இத்திருத்தலத்தை திருமழிசையாழ்வார் ஒரு திருப்பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
2431@
கூற்றமும் சாரா* கொடுவினையும் சாரா* தீ
மாற்றமும்* சாரா வகையறிந்தேன்*
ஆற்றங்கரை கிடக்கும்* கண்ணன் கடல்கிடக்கும்*
மாயன் உரைக்கிடக்கும்* உள்ளத்து எனக்கு.
காவிரி ஆற்றங்கரையான கபிஸ்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் கண்ணனும், பாற்கடலில் யோக நித்திரையில் உள்ள மாயவனும் ஆன எம்பெருமான் சதா சர்வ காலமும் என் சிந்தையில் குடியிருப்பதால், என்னை மரண பயமும், கொடும்பாவங்களும், தீயனவைகளும் அண்டாமல் இருப்பதற்கும், அந்த மாயப்பிரானை பற்றுவதற்கும் ஆன வழிவகையை நான் கண்டு கொண்டேன் !
ஒற்றைப் பிரகாரம் உடைய சிறிய கோயிலிது. மூன்று நிலைகளை உடைய ராஜகோபுரத்தை படத்தில் காணலாம். இத்திருக்கோயிலில் ஆண்டாளுக்கும் சந்தான கிருஷ்ணனுக்கும், யோக நரஸிம்மருக்கும், சுதர்சன ஆழ்வாருக்கும், கருடனுக்கும், பிற ஆழ்வார்களுக்கும் சன்னிதிகள் உள்ளன. பங்குனி மாதத்தில் கஜேந்திர மோட்சம் கொண்டாடப்படுகிறது. இதைத் தவிர, வைகுண்ட ஏகாதசியும், ஸ்ரீராமநவமியும், அக்ஷய திருதியையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா
8 மறுமொழிகள்:
Test !
எல்லா கோபுரங்களிலும் நிறைய வேலைப்பாடுகள் இருக்கும் இதில் இல்லையே?
ஒரு வேளை காசு தட்டுப்பாடோ?
வடுவூர் குமார்,
நன்றி. இது ஒரு சின்னக் கோயில், கவனிப்பாரும் இல்லை !
எ.அ.பாலா
திருக்கபித்தலத்தைப் பற்றியும் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணனைப் பாடிய திருமழிசையாழ்வார் பாசுரத்தையும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி பாலா.
அன்பினிய பாலா,
உங்களின் பல பதிவுகள் வாசித்தேன். கடந்த மூன்று மாத காலமாக,எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்க எனது கண்கள் செல்லும் சில வலைப்பூக்களில் உங்களுடையதும் ஒன்று.
ஒரு குறிப்பிட்ட துறை அல்லது வடிவம் இவைகளுக்குள் அடங்கிவிடாத உங்களுடைய பண்முக எழுத்துத் திறமையை பாராட்டுகிறேன்.
சேவைகள் என்ற புண்ணிய பணிகள் எழுத்தை விட உங்கள் வாழ்க்கையில் மேலோங்கி நிற்பது கண்டு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
இறைவன் உங்களுக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தந்து தொடர்ந்து ஆசீர்வதிக்க என் இனிய பிரார்த்தனைகள்.
பாசமுடன் என் சுரேஷ்
சுரேஷ்,
வாசிப்புக்கும், அன்பான பாராட்டுக்கும் நன்றி, சுரேஷ் ! நான் 'ஆல்ரவுண்டர்' இல்லை, Jack of all trades :)
எ.அ.பாலா
"நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை
ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி
ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள்
இருநீர் மடுவுள் தீர்த்தனை"
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை :)
நன்றி பாலா.5கிருஷ்ன சேத்திரங்களில் ஒன்று என்பது இனிய செய்தி
Post a Comment